சூ. 182 :

தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்

எத்திறத் தானும் கிழத்திக் கில்லை

முற்பட வகுத்த இரண்டலங் கடையே

(39)
 

க - து : 

தலைவிக்குத்  தற்புகழ்ச்சி   குற்றமாகாத   இடங்கள்    இவை
என்கின்றது.
 

பொருள் :  தலைமகன்   முன்னர்த்  தன்னைப்   புகழ்ந்து   கூறுதல்
தலைவிக்கு   எத்தகைய  நிலையினும்  இல்லை. அங்ஙன   இல்லையாதல்
முன்னர்  அகத்திணையியலுள்  வகுத்துஓதிய  இரண்டு இடங்கள் அல்லாத
விடத்து.
 

அவையாவன    பரத்தையிற்    பிரிந்துவந்த   தலைவன்  இரத்தலும்
தெளித்தலுமாகக் கூறுமிடங்களாம்.
 

எ - டு :

"ஒரூஉ கொடியியல் நல்லார்" என்னும் மருதக்கலியுள்

‘கடியர் தமக்கு யார்சொல்லத்தக்கார் மாற்று’
 

எனத்     தலைவன்     இரந்தகாலை     "வினைக்கெட்டு    வாயல்லா
வெண்மையுரையாது கூறுநின் மாயம்மருள்வா ரகத்து"
 

எனத்,   தான்  மருளேன்  என  உயர்த்துக்  கூறியவாறும்,  தலைவன்
தீதன்மை தேற்றக் கண்டீபாய்தெளிக்கு எனத் தெளிவித்த காலை
 

நீ கூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றுஇனி

யார்மேல் விளியுமோ கூறு"
 

எனத் தன்னைப் புகழ்ந்து எண்ணியவாறும் கண்டுகொள்க.