சூ. 293 :தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே
(17)
 

க - து :
 

ஆறாறவையும்   அன்னபிறவுமாக   வரும்   உவமச்சொற்களின்
பொருளுணரும் முறைமை கூறுகின்றது.
 

மேற்கூறிய   உவமச்   சொற்களை  ஆசிரியர்  ‘அன்ன’ ‘என்ற’ எனப்
பெயரெச்ச   வடிவாகவும்  ஏய்ப்ப,   உறழ,   ஒப்ப   என  வினையெச்ச
வடிவாகவும் அமைத்துக்கூறி அவை  பல்குறிப்பின  என அவற்றின்  வடிவ
இயல்பு  கூறியதன்றி  அவற்றின் பொருளும் அவை வினையுவமம் முதலிய
நான்கற்கும்    உரிமை    பெற்று   வருதற்குக்  காரணமும் வெளிப்படக்
கூறாமையான்   புறனடை   வகையான்   அவற்றை   உணர்ந்து கொள்ள
இச்சூத்திரத்தான் உணர்த்துகின்றார் என்க.
 

பொருள் :அன்ன, ஆங்க முதலாக மேற்கூறப்பெற்ற உவமச் சொற்கள்
தாம் தோன்றிய  உரியடி (வேர்நிலை) யானும்   தமக்கு  முன்னும் பின்னும்
வந்து நிற்கும் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆயவற்றின் சார்பானும் தத்தம்
வரலாற்று முறைமையான் பொருள் விளங்க நிற்கும்.
 

என்றது;    ஒப்பில்வழியாற்        பொருள்      செய்வனவெல்லாம்
இடைச்சொற்கள்   என  இடையியலுள் ஓதினமையான் ஒப்பு என்னும் ஒரு
வாய்பாடு தவிர்ந்த ஏனைய வெல்லாம் வேறு வேறு   பொருளுடையவை  
என்பதும்    அவை   அவ்வப்பொருள்    வாயிலாகவே    ஒப்புமையை
உணர்த்தி நிற்கும் என்பதும் கூறியவாறாம்.
 

பொருள்   தோன்றுதலாவது : அன்ன  என்பது  அத்தன்மை என்னும்
பொருளுடையதன்றே?  அஃது புலியன்ன  மறவன்  என்றவழிப்  புலிக்கும்
மறவனுக்கும்  உரிய  பொதுத்தன்மையான வலிமையைச்  சுட்டி  நிற்றலின்
அவ்வாற்றான் ஒப்புமைப் பொருள் தோன்ற நிற்றலாம்.
 

"எழிலி வானம்  எள்ளினன் வரூஉம்" என்ற வழிக் கைம்மாறு  கருதாது
வழங்கும்    தன்மையுடையதெனக்   கருதப்படும்   எழிலி  வானம் பருவ
வரையறையுடையதாகலின் அங்ஙனம் கைம்மாறு கருதாது வழங்கும் கடுமான்
தோன்றலின்   ஈகைக்கு முன்   சிறவாமையான்   எள்ளுதல் என்பது இரு
பொருட்கண்ணும்  உள்ள வண்மையைக்   கருதி நிற்றலின்   ஒப்புமையை
உணர்த்தி  நிற்குமாறு  காணலாம்.  இவ்வாறே ஏனைய உவமச்சொற்களும்
தத்தம் பொருள்   சிதையாமல் ஒப்புமை உணர்த்தி  நிற்குமாற்றை  ஓர்ந்து கொள்க.