சூ. 201 :

பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே

நட்பின் நடக்கை ஆங்கலங் கடையே (5)
 

க - து :

இது பால்கெழுகிளவி கூறுதற்குரியோர் இவர் என வரையறை
கூறுகின்றது.
 

பொருள் :  தலைவனும்  தலைவியும்   புணர்ந்து   உடனுறைதலாகிய
நட்பின்நடக்கை   யல்லாதவிடத்துப்  பாகுபாடுற்றுப்   பொருந்திய  கிளவி
தலைவன், தலைவி, நற்றாய், செவிலி என்னும் நால்வர்க்கும் உரித்தாகும்.
 

‘நட்பின்  நடக்கை’   என்றது   கிழவனும்   கிழத்தியும்    பிரிவின்றி
உடனுறையும்  ஒழுக்கத்தை. காமக்கூட்டம் இடையறவு படுதலான் தலைவன்
தலைவியரும்,  பிரிவாற்றாமையான்  செவிலியும் நற்றாயும் கலக்கமுறுதலின்
இந்நால்வர்க்கும் உரித்தாயிற்று.
 

தலைவன் தலைவியரைக் கழறியுரைத்தலும், தலைவியை ஆற்றுவித்தலும்,
முன்னின்று  உடன்போக்கலும்,  வாயில்  மறுத்தலும்,  வாயில்   நேர்தலும்
தோழிக்குரிய  இயல்பாதலின்  அறிவும் புலனும் வேறுபட  நிறுத்துக் கூறும்
பால்கெழு  கிளவி தோழிக்கு  இல்லையாயிற்று. அவ்வாற்றான்  பாங்கற்கும்
பால்கெழு கிளவி இயையாமை அறிக.
 

இங்ஙனம்  அகப்பொருள்  மாந்தர்தம் பண்பும்  இயல்பும்  உளவியலும்
நோக்கி ஆசிரியர் கூறும் இலக்கண  மரபுகளை  ஓராமல்  முன்னுக்குப்பின்
முரணாக    உரையாசிரியன்மார்  கூறும்   விளக்கங்கள்  தமிழ்நெறியொடு
பொருந்திவாராமையைத் தேர்ந்து தெளிக.