சூ. 153 :

புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்

இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்

பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும்

மறையின் வந்த மனையோள் செய்வினை

பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்

காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின்

தாய்போற் கழறித் தழீஇய மனைவியைக்

   

காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்

       

இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து

பின்னை வந்த வாயிற் கண்ணும்

மனையோ ளொத்தலின் தன்னோர் அன்னோர்

மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்

எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவும்

கண்ணிய காமக் கிழத்தியர் மேன

 (10)
 

க - து :

கற்பின்கண்      தலைவனது     புறத்தொழுக்கத்திற்குரியராகிய
காமக்கிழத்தியர் கூற்று நிகழுமாறு கூறுகின்றது.
  

பொருள் : புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் என்பது =  தலைவன்
தன்னைப் புல்லும் வகை  அவனது  உள்ளத்தினைத் தன்பால்  மயக்கமுறச்
செய்யும் பொய்யாய புலவியிடத்தும் என்றவாறு.
 

அஃதாவது  தலைவியைப் போலத்  துனியுற்றுப்  புலத்தலின்றி  அவன்
வேட்கை  மிகுதற்குரிய  மொழிகளான்  நயப்புத்  தோன்ற புலந்து  கூறும்
என்றவாறு.   புலந்தாள்   போல  அவள்  கூறும்  மொழிகள்  தன்னைப்
புல்லுமாறு  மயக்கஞ்  செய்யும்   என்பார்.  "புல்லுதல்  மயங்கும்  புலவி"
என்றார். எ - டு : வந்தவழிக் கண்டுகொள்க.
 

2) இல்லோர்  செய்வினை  இகழ்ச்சிக் கண்ணும்  என்பது = தலைவனது
மனையகத்தார்   தனக்கு   இழிவு   நேருமாறு    புரியும்    செயல்களை
இகழ்ந்துரைக்குமிடத்தும் என்றவாறு.
  

எ - டு :

எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப்

பொரியகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்

வெறிகொள் பாசடை உணீஇயர் பைப்பயப்

பறைதபு முதுசிரல் அசைபு வந்திருக்கும்

துறைகே ழூரன் பெண்டுதன் கொழுநனை

நம்மொடு புலக்கும் என்ப, நாமது

செய்யா மாயினும் உய்யா மையின்

செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவண்

உலமந்து வருகம் சென்மோ, தோழி

ஒளிறு வாட்டானைக் கொற்றச் செழியன்

வெளிறில் கற்பின் மண்டமர் அடுதொறும்

களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்

தண்ணுமைக் கண்ணின் அலைஇயர் தன்வயிறே

(அக-106)
 

என வரும்.
 

3) பல்வேறு புதல்வர்க்  கண்டுநனி  உவப்பினும் என்பது = தலைவற்கு
மைந்தராய     புதல்வரைக்    கண்டு    பல்வேறு     வகையில்   மிக உவப்புறுதற்கண்ணும் என்றவாறு.
 

புதல்வர்க்   கண்டு  பல்வேறு  உவப்பினும்  எனக்  கூட்டுக. சிறுதேர்
உருட்டலும்.   தளர்நடை   புரிதலும்   சப்பாணி   கொட்டலும்,  மழலை மொழிதலும்,  பிற   விளையாடலும்   தனித்தனிச்சுவை  பயப்பனவாதலின்
பல்வேறு உவப்பினும் என்றார்.
 

எ - டு :

"ஞாலம் வறந்தீர" என்னும் மருதக்கலியுள் (82)

"மடக்குறு மாக்களொடு ஓரை யயரும்

அடக்கமில் யோழ்தின்கண் தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாயுழை புக்காற்கு, அவளும்

மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து

பெருமான் நகைமுகங்காட்டு என்பாள் கண்ணீர்

சொரிமுத்தம் காழ்சோர்வ யோன்றன, மற்றும்

வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு அவளும்

மயக்குநோய் தாங்கி மகன்எதிர் வந்து

முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே

நினக்குயாம் யாரேம் ஆகுதும் என்று

வனப்புறக் கொள்வன நாடி அணிந்தனள்"
 

எனத்  தோழி  காமக்கிழத்தியர் செயலையும்  உவப்பையும்  தலைவியிடம் கூறியமை கண்டுகொள்க.
 

4) மறையின் வந்த மனையோள்  செய்வினை பொறையின்று  பெருகிய
பருவரற்   கண்ணும்   என்பது  =  களவின்   வழி  வந்து   கற்புக்கடம்
பூண்டொழுகும்  மனைவியிடத்துத்  தலைவன் புதுவோர் சாயற்கு  அகன்று
செய்யும்  கொடுவினையைப்   பொறுக்கலாற்றாமல்  வளர்ந்த  துயரத்தைத்
தெரிந்துரைக்குமிடத்தும் என்றவாறு.
 

களவுக்காலத்து நெஞ்சு தளையுற்றும்  தனிமையுற்றும் வருந்திய தலைவி
வரைந்து  மனைக்கிழமை   ஏற்ற   பின்னரும்  தலைவன் உடனுறையாமல் ஆடலும் பாடலும் கூடலும் கருதிப் பிரிந்தியற்றும் வினை அம்மனைவிக்குப்
பெரிதும்   துயர்தரும்    என்பதனை     நன்குணர்ந்த     காமக்கிழத்தி,
தலைவனைக்  கடிந்துரைக்கும்  எனக்  காமக்கிழத்தியர்தம்  அன்பு  நிலை
கூறிற்றென்க.  இக் கிளவிக்கு இதுவே  பொருள்  என்பதனை  மேல்வரும்
கிளவியானும் அறிந்துகொள்க.
 

அன்றி     மனையோள்      செய்வினையைப்     பொறுத்தலின்றிக்
காமக்கிழத்தி  துன்புறும்   எனப்பொருள்  கூறின்   அது    தலைவியின்
பெருங்குணத்திற்கு   இழுக்காமென்க.  அன்றியும்   முன்னர்   "இல்லோர்
செய்வினை   இகழ்ச்சிக்   கண்ணும்"  என்பதன்கண்  அவள்  வருத்தமும்
அடங்குதலின் மீண்டுங்  கூறுதல் சிதைவாம்  என்க. மற்றும் அப்பொருட்கு
‘மறையின் வந்த’ என்பது  வெற்றெனத் தொடுத்தலாய் முடியுமென்க. எ.டு :
வந்துழிக் கண்டுகொள்க.
 

5) காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் தாய்போற்  கழறித் தழீஇய
மனைவியைக்  காய்வின்  றவன்வயிற்   பொருத்தற்  கண்ணும்  என்பது =
தலைவன்  தலைவியிடத்துச்  செலுத்தும்  காதலை   மறந்து  ஒழுகுதலான்
தலைவனது  இல்லறம் இகழப்படாமல் நடத்தலை விரும்பித் துணை நிற்கும்
தன்கடப்பாடாகிய    ஒப்புரவினான்   செவிலியை   ஒப்பத்   தலைவனை
இடித்துரைத்துக்    கரணத்தின்   அமைந்து  தழுவிக்    கொள்ளப்பெற்ற
தலைவியை  அழுக்காறின்றித்  தலைவனொடு  பொருந்தச் செய்யுமிடத்தும்
என்றவாறு.
 

இவ்  இரண்டு  கிளவிக்கும் உரிய காமக்கிழத்தி என்பவள் தொன்முறை
மனைவியொடு  போந்த  சிறப்புடையவளாவாள். அகவையான்    மூத்தமை
தோன்றத் ‘தாய்போற்  கழறி’ என்றார். இவை  உலகியல் பற்றிய  புலனெறி
வழக்கிற்கு உரியவாதலையும் ஓர்ந்து கொள்க.
 

எ - டு :

ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தென

பார்த்துறைப் புணரி அலைத்தலின் புடைகொண்டு

மூத்து வினைபோகிய மூரிவாய் அம்பி

நல்லெருது நடைவளம் வைத்தென உழவர்

புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு

நறுவிரை நன்புகை கொடாஅர்ச் சிறுவீ

ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல்

முழவுமுதற் பிணிக்கும் துறைவ! நன்றும்

விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்

தவறும் நற்கறி யாயாயின் எம்போல்

நெகிழ்தோள் கலுழ்ந்த கண்ணீர்

மலர்தீய்ந் தனையர் நின்னயந் தோரே

(நற்-315)
 

இதன்கண்   மூத்து   வினைபோகிய   எம்போலன்றி   இளையளாகிய
மனைக்கிழத்தி  மலர்ந்த  செவ்வியான்  முறைவீயாய்க்  கழியாது இடையே
எரிந்து    கரிவுற்ற   பூவினைப்போலச்   செவ்வியழிதல்   ஒவ்வாதெனத்
தலைவனை இடித்துரைத்தமை கண்டு கொள்க.
 

6) இன்னகைப்  புதல்வனைத்   தழீஇ  இழையணிந்து பின்னை   வந்த
வாயிற்   கண்ணும்  என்பது = இன்பம்   பயக்கும்   குறுமுறுவலையுடைய
புதல்வனைத்   தழுவி  எடுத்துத்  தான்  விரும்பியவாறு  அணிகலன்களை
அணிவித்து  மகிழ்ந்து   அப்புதல்வன்   பின்னாக  வந்த  வாயிலிடத்தும்
என்றவாறு.
 

எ - டு :

"பெருந்திரு நிலைஇய" என்னும் மருதக் கலியுள்
(83)
 
காலம்  நீட்டித்த  காரணம் என்?  எனத் தலைவி  தோழியை வினயாவழி,
 

நீலநிரைப் போது உறுகாற்கு உலைவனபோல்

சாலகத்து ஓங்கிய கண்ணர் உயர்சீர்த்தி

ஆலமர் செல்வன் அணிசால் மகன்விழாக்

கால்கோள் என்றுஊக்கிக் கதுமென நோக்கித்

திருந்தடி நூபுரம் ஆர்ப்பஇயலி, விருப்பினால்

கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு

ஒண்மை எதிரிய அங்கையும் தண்எனச்

செய்வன சிறப்பின் சிறப்புச்செய்து இவ்விரா

எம்மொடு சேர்ந்துசென் றீவாயால், செம்மால்

நலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த

புலம்பெலாம் தீர்க்குவேம் மன்என்று இரங்குபு

வேற்றானாத் தாயர் எதிர்கொள்ள மாற்றாத

கள்வனால் தங்கியது"
 

எனத்   தோழி   தலைவியிடத்துக்,  காமக்கிழத்தியர்  செய்த   செயலைக்
கூறியவாறு காண்க. ஈண்டு  வாயில் என்றது  தோழியை. என்னை? தலைவி
ஊடிய வழி அதனைத்  தீர்ப்பவள்  அவளாதலின்  என்க. புதல்வன்  பின்
சென்ற   வாயிலாகிய  தோழியிடத்துக்   காமக்கிழத்தியர்   கூறும்  கூற்று
வந்துழிக் கண்டு கொள்க.
 

7) மனையோள்  ஒத்தலின்  தன்னோர் அன்னோர்  மிகைபடக் குறித்த
கொள்கைக்  கண்ணும் என்பது = தலைவனது  இல்லின்கண்   உறைதலான்
தான்     தலைவியை     ஒத்தாளாகக்    கருதலின்   தன்போலும்  பிற
காமக்கிழத்தியரினும்   தன்னைச்   சிறந்தாளாக    எண்ணிக்    கொண்ட
கொள்கையின்கண்ணும் என்றவாறு.
 

எ.டு :  வந்துழிக்   கண்டுகொள்க.  இதற்குக்   "குழற்காற்  சேம்பின்"
என்னும் அகப்பாடலைக் காட்டுவார் நச்சினார்க்கினியர்.
 

8) எண்ணிய  பண்ணையென்று  இவற்றொடு  பிறவும் கண்ணிய  காமக்
கிழத்தியர்    மேன   என்பது   =   பலவாக   எண்ணுதல்    அமைந்த
விளையாட்டினைத் தலைவனொடு நிகழ்த்துமிடத்தும், அவை போல்வனவாக
வரும் பிறஇடத்தும்  கூற்று நிகழ்த்தல்  தலைவனாற்கருதிக் கொள்ளப்பட்ட
காமக்கிழத்தியரிடத்தனவாகும் என்றவாறு.
 

எ - டு :

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்

பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி

யாமஃது அயர்கம் சேறும் தானஃது

அஞ்சுவ துடையளாயின் வெம்போர்

நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி

முனையான் பெருநிரை போலக்

கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே

(குறு-60)
 

இது புனலாடியது. ஏனையவும் வந்துழிக் கண்டுகொள்க.
 

‘எண்ணிய’  என்பதற்குக்  கருதத்தக்க  என்றும்  தலைவனைக் கருதிய
என்றும்   பொருள்   கோடலுமாம்.  பண்ணை  =  இன்ப   விளையாட்டு.
கடப்பாட்டாண்மையும்   தாய்போற்  கழறலும்  பிறவுமாகிய  பண்பமைந்து
திகழ்தலின்   "கண்ணிய   காமக்கிழத்தியர்"  எனச்   சிறப்பித்தார்.  மற்று
அதனானே கண்ணாத வழி  வருவோர் காமக்கிழத்தியர்  ஆகார் என்பதும்
அன்னார்   பரத்தையர்    எனப்பெறுவர்   என்பதும்  உணர்ந்துகொள்ள
வைத்தார் என்க.
 

பிறவுமாக வருவனவற்றுள் சில வருமாறு :
 

"கண்டேன் நின்மாயம்" என்னும் மருதக்கலியுள்            (90)

"கண்டதுநோயும் வடுவும் கரந்துமகிழ் செருக்கிப்

பாடுபெயல் நின்ற பானா ளிரவில்

தொடிபொலி தோளும் முலையும் கதுப்பும்

வடிவார் குழையும் இழையும் பொறையா

ஒடிவது போலும் நுசுப்பொடு அடிதளரா

ஆராக் கவவின் ஒருத்திவந்து அல்கல்தன்

சீரார் நெகிழம் சிலம்பச் சிவந்துநின்

போரார் கதவம் மிதித்த தமையுமோ

ஆயிழை சூர்க்கும் ஒலிகேளா அவ்எதிர்

தாழ தெழுந்துநீ சென்றத மையுமோ

மாறாள் சினைஇ அவளாங்கே நின்மார்பில்

நாறிணர்ப் பைந்தார் பரிந்தத மையுமோ

தேறுநீ தீயேன் அலேன்என்று மற்றவள்

சீறடி தோயா இறுத்த தமையுமோ

கூறினி காயா மோயாம்"
 

இது  தலைவன்  வம்பப்பரத்தையிடத்துச்  சென்றுவந்ததறிந்த காமக்கிழத்தி
ஊடிக் கூறியது.
 

வானம் வேண்டா வறனில் வாழ்க்கை

நோன்ஞாண் வினைஞர் கோளறிந் தீர்க்கும்

மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை

நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை

இருங்கயந் துளங்கக் காலுறு தோறும்

பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு

எழுந்த கௌவையோ பெரிதே நட்பே

கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்

புனலாடு கேண்மை யனைத்தே அவனே

ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட

ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்பத்

தண்ணறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து

இன்னும் பிறள்வயி னானே மனையோள்

எம்மொடு புலக்கும் என்ப, வென்வேல்

மாரி யம்பின் மழைத்தோல் பழையன்

காவிரி வைப்பின் போஓர் அன்னஎன்

செறிவளை உடைத்தலோ இலனே, உரிதினின்

யாம்தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்

திருநுதல் பசப்ப நீங்கும்

கொழுநனும் சாலும்தன் உடன்உறை பகையே

(அக-186)
 

இது தலைமகற்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது.