சூ. 221 : | முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல் |
| நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே |
(25) |
க - து : | அகப்பொருட்கண் பயின்று வருவதொரு சொல்லைப் பற்றிய மரபு கூறுகின்றது. |
பொருள்: முறைப் பெயரல்லாததாய், அதன் மருங்காகப் பொருந்திய தகவுடையதொரு பொதுச்சொல் புலனெறி வழக்கிற் பொருந்திய மரபினானே ஆஃஉ, மகடூஉ ஆகிய இருபாற்கும் உரித்தாக வரும். |
அப் பொதுச்சொல்லாவது கேண்மை பற்றி வரும் "எல்லா" என்பதாம். இருபாற்கும் ஒப்ப வருதலின் பொதுச்சொல்லாயிற்று. அது தலைவன், பாங்கன், தலைவி, தோழி என்னும் நால்வர்க்கும் உரித்தாக வழங்கலின் "கெழுதகைப் பொதுச்சொல்" என்றார். |
ஏடா, ஏடி, எலுவன், எலுவி என்பவை பாலுணர நிற்றலின் ஈண்டுப் பொதுச்சொல் என்றது ‘எல்லா’ என்னும் விளிப்பெயரையே என்பது பெறப்படும். அஃது எல்லா, எலா, எலுவ எனச் சிறிது திரிந்தும் நிற்கும் என அறிக. |
எ - டு : | ‘’எதிர்வளி நின்றாய் நீசெல் இனிஎல்லா" |
(கலி-81) |
இது தலைவியைத் தலைவன் விளித்தது. |
‘’எல்லா! நீ முன்னத் தானொன்று குறித்தாய்’’ |
(கலி-61) |
இது தலைவனைத் தோழி விளித்தது. |
‘’எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப’’ (குறு- 129) இது தலைவன் பாங்கனை விளித்தது. பிறவும் வந்துழிக் கண்டுகொள்க. |