சூ. 272 :

முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்

அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்

தூது முனிவின்மை துஞ்சிச் சேர்தல்

காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்று

ஆயிரு நான்கே அழிவில் கூட்டம்

(23)
 

க - து :

கற்பொழுக்கத்திற்கு   அடிப்படையாய்   அதற்குமுன்   னிகழும்
வரைவிற்குரிய   கிளவிகள்   பற்றிவரும்   உணர்வும்   செயலு
மாகியவற்றைத் தொகுத்து அவை மேற்கூறிய மன்னிய வினையின்
நிமித்தமாய்  எண்வகை  மெய்ப்பாடுகட்குப்  பொருளாக  வரும்
என்கிறது.
 

பொருள் :முட்டுவயிற்கழறல்   முதலாகக்   கட்டுரையின்மை  யீறாகச்
சொல்லப்பட்ட  பொருள்  எட்டும்  அழிவில்  கூட்டத்திற்கு  நிமித்தமாம்.
எனவே இவையும் அவையலங்கடை  மெய்ப்பாட்டுப்  பொருளாதற்கு  உள
என்றவாறு.
 

இவற்றின்  சொற்பொருளை   நோக்கின்   இவை   எட்டும்  வரைந்து
எய்தும்  அழிவில்  கூட்டத்திற்கு  (கற்பிற்   புணர்ச்சி)   ஏதுவாவனவன்றி
அழிவில் கூட்டமாதற்கு ஏலாமையான் இவையும் மேலன  போல  நிமித்தம்
என்பது   நன்கு  புலனாகும்.  ஆதலின்   மன்னிய   வினைய  நிமித்தம்
என்பதனை அதிகாரத்தாற் கொண்டு பொருள் உணர்ந்து  கொள்க.  என்று
என்பது எண்ணிடைச் சொல். ஏகாரம் இசைநிறை.
 

‘பின்வரும்  தெய்வமஞ்சல்’  முதலிய   பத்தும்  "செப்பிய  பொருளே"
என்பதனான்     அவை     அழிவில்      கூட்டத்திற்குரியவை    என
இச்சூத்திரஇறுதியொடு மாட்டெறிந்து  கூறுவார்  ஆசிரியர்.  அம்மாட்டேறு
இனிது பொருள்படற் பொருட்டு இச்சூத்திரத்து அழவின்  கூட்ட  நிமித்தம்
என்னாமல் வாளா அழிவில்  கூட்டம்  எனக்  கூறினார்.  கூறி,  நிமித்தம்,
என்பதனை அதிகாரத்தாற் கொள்ள வைத்தார் என அறிக.
 

1. முட்டுவயிற் கழறலாவது :தலைவி இற்செறிப்புறுதலானும் தலைவன்
வருந்தொழிற்கு அருமைப்பாடுறுதலானும்  கூட்டத்திற்கு முட்டுப்பாடெய்திய
வழித் தலைவி கழற்றுரை கூறுதல்.
 

"நொச்சி  வேலித்  தித்தன்  உறந்தைக்  கன்முதிர்  புறங்  காட்டன்ன
பன்முட்டின்றால்    தோழிநங்க   ளவே"   (அகம்-122)   எனத்தலைவன்
முட்டுப்பாடுற்ற வழி.
 

     

"தண்ணந் துறைவற் காணின்-முன்னின்று

கடிய கழறல் ஓம்புமதி, தொடியோள்

இன்ன ளாகத் துறத்தல்

நும்மிற் றகுமோ என்றனை துணிந்தே"

(குறு-296)
 

எனத் தோழியைக் குறிப்பாற் கழறுமாறு  கூறுதலைக்கண்டு  கொள்க. இஃது
வரைவுகடாதற்   குறிப்பாதலையும்    அதனான்    இது  வரைந்தெய்தும்
கூட்டத்திற்கு நிமித்தமாதலையும்  அறிக.  இது  வெகுளிக்குப்  பொருளாக
அமையும்.
 

2. முனிவுமெய்ந் நிறுத்தலாவது :    தலைவன்     வரைவிற்குரியன
புரியாமல் களவு நீட்டித்தலின் அவ்வெறுப்புத்  தன்  மேனியிற்  புலப்படத்
தோழியை வற்புறுத்துங் குறிப்பொடு நிற்றல்.
 

எ - டு :

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே

இமைதீய்ப் பன்ன கண்ணீர்த் தாங்கி

அமைதற் கமைந்தநங் காதலர்

அமைவில ராகுதல் நோமன் னெஞ்சே

(குறு-4)
 

இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்

ஆய்மல ருண்கண் பசலை

காம நோயெனச் செப்பா தீமே

(அகம்-52)
 

என்பதும் அது. இதுவும் வெகுளிக்குப் பொருளாக அமையும்.
 

3. அச்சத்தின் அகறலாவது :  தலைவற்கு  வருந்தொழிலான்   ஊறு
நேருங்கொல்  எனத்  தலைவி  அஞ்சிக்  குறியிடத்து  நேராது  சேயளாய்
ஒழுகுதல்.
 

எ - டு :

இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம்

என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு

இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்

குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்

கான நாடன் வரூஉம், யானைக்

கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி

மாரி வானந் தலைஇ நீர்வார்பு

இட்டருங் கண்ண படுகுழி இயவின்

இருளிடை மிதிப்புழி நோக்கியவர்

தளரடி தாங்கிய சென்ற தின்றே

(அக-128)
 

எனவரும்.  இதன்கண்  நெஞ்சு  சென்றது   என்றதனான்  தலைவி  தான்
குறியிடத்திற்குச்     செல்லாது     வலித்திருத்தல்    புலப்படும்.    இது
பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.
 

4. அவன் புணர்வு மறுத்தலாவது :  தலைவன்  பகற்குறியும்  இரவுக்
குறியும் வேண்டியவழி அவற்றை மறுத்தொழுகுதல்.
 

எ - டு :

பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கு

இன்னா திசைக்கும் அம்பலொடு

வாரெல் வாழியர் ஐயவென் தெருவே

(குறு-139)
 

நல்வரை நாட நீவரின்

மெல்லிய லோரும் தான்வா ழலளே

(அகம்-12)
 

எனவும் வரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.
 

5. தூது முனிவின்மை :வரைவு மலிதல்  வேண்டி  அவன்  புணர்வு
மறுத்து வலித்திருக்கும்  தலைவி  பிரிவாற்றாமையான்  புள்ளும்  மேகமும்
முதலாய பொருள்களை நோக்கித்  தன்னிலையைத் தலைவற்குக்  கூறுமாறு
தூதுரைத்தலை வெறாது விரும்புதல்.
 

எ - டு :

கானலுங் கழறாது கழியும் கூறாது

மேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

ஒருநின் னல்லது பிறிதியா துமிலனே

இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்

கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்

தண்டா தூதிய வண்டினம் களிசிறந்து

பறவை கிளருந் துறைவனை நீயே

சொல்லல் வேண்டுமால் அலவ

(அகம்-170)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக வரும்.
 

தலைவன்   தூது   விடுதலை முனியாமை எனவும் பொதுவிற் பொருள் கொள்ள நின்றதேனும் களவின்கண் தோழியை   இரந்து  பின்னிற்றலன்றித்
தலைவன்   தூது    விடுதல்    மரபன்மையான்    இது   தலைவிக்கே  உரியபொருளாகும் என்க.
 

6. துஞ்சிச்   சேர்தலாவது :   வரைதலால்   எய்தும்   கூட்டம்  தான்
விரும்பியாங்கு நிகழாமல் நீட்டித்தலான்  தலைவி உளம்  மடிந்து   மனை
சேர்ந்திருத்தல்.
 

துஞ்சுதல் - மடிந்திருத்தல். இதனைத்  அன்னோர், “துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவதஞ்சிப்  புகழெனின்  உயிரும்   கொடுக்குவர்”   (புற-182)   என வருதலானறிக.
 

எ - டு :

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை

கிளிகுறைத் துண்ட கூழை இருவி

பெரும்பெயல் உண்மையின் இலையொலித் தாங்கென்

உரஞ்செத்தும் உளெனே தோழியென்

நலம்புதி துண்ட புலம்பி னானே

(குறு-133)
 

எனவரும்.  இதன்கண் ‘உரஞ்செத்தும்  உளென்’  என்றதனான் தலைவி
மடிமையுற்றுப்   புலம்பியிருத்தல்   புலனாகும்.   இஃது    இளிவரலுக்கும்
அழுகைக்கும் பொருளாக அமையும்.
 

7. காதல்   கைம்மிகலாவது :   மறைபிறரறியாதொழுகும் நிறைதளர்ந்து
புள்ளொடும்  பிறவொடும்  தலைவி நொந்து  கூறலும், நெஞ்சுளைதலுமாம்.
இடைக்காலத்தார் இதனைக் "காமமிக்கழிபடர்" என்பர்.
 

எ - டு :

யாரணங் குற்றனை கடலே, பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன

மீனார் குருகின் கானலம் பெருந்துறை

வெள்வீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலும் கேட்குநின் குரலே

(குறு-163)

உள்ளினும் உள்ளம் வேமே உள்ளாது

இருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி

வான்றோய் வற்றே காமம்

சான்றோ ரல்லர் யாம்மரீஇ யோரே

(குறு-102)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

8. கட்டுரையின்மையாவது :  துஞ்சிச்  சேர்ந்து கையறவுற்ற  நிலையில்
பிறரைக்   கழறிஉரைக்கும்  மன  எழுச்சியின்றி   வாய்  வாளாதிருத்தல்.
கட்டுரைத்தல் - கழறியுரைத்தல்.
 

எ - டு :

.......................... துறைவன்

குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்று

அறியார்க் குரைப்பலோ யானே எய்தவிப்

பணையெழில் மென்றோள் அணைஇய அந்நாள்

பிழையா வஞ்சினம் செய்த

களவனும் கடவனும் புணைவனு மவனே

(குறு-318)
 

எனவரும். இதன்கண் அறியார்க்குரைப்பலோ என்றது காண்க.
 

இது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

இதற்கு    உரைமறுத்திருத்தல்      எனப்     பொருள்     கூறுவர்
உரையாசிரியன்மார்.     அது    கருத்தாயின்    ஆசிரியர்  உரையாமை,
உரையாடாமை,   உரைமறுத்திருத்தல்    என்றாற் போலக்   கூறுவரன்றிக்
கட்டுரை   என இங்ஙனம்   அடைகொடுத்துக்    கூறார் என்க.   மேலும்
உரையாடாமை   என்பது மெய்ப்பாட்டுப்   பொருளாதற்குச்  சிறவாமையும்
ஓர்ந்து கொள்க.