சூ. 227 :

வருத்த மிகுதி சுட்டுங் காலை

உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்

(31)
 

க - து : 

இருவகைக் கைகோளினும் தலைமக்கட்குரியதொரு பொருண்மை
கூறுகின்றது.
 

பொருள்:  களவின்கண்   கூட்டத்திற்கு   இடையூறாக    அமையும்
இற்செறிப்புத் தலைவன் வருந்தொழிற்கருமை, அல்லகுறி முதலியவற்றானும்,
கற்பின்கண்  பரத்தையிற்பிரிவு, உணர்த்த உணரா ஊடல் முதலியவற்றானும்
எய்தும் வருத்தம் கைகடந்து  போதலைக் கருதுமிடத்து  உயிரொடு வாழும்
வாழ்க்கையின்கண் அவலமுற்றுக் கூறும் கூற்றுத் தலைமக்கட்கு உரித்தெனக்
கூறுவர் நூலோர்.
 

எ - டு :

தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின்

நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு

யோயின்று சொல்என் உயிர்

(கலி-24)

எல்லையும் இரவும் துயில்துறந்து பல்லூழ்

அரும்படர் அவலநோய் செய்தான்கண் பெறல்நசைஇ

இருங்கழி ஓதம்போல் தடுமாறி

வருந்தினை அளியஎன் மடங்கெழு நெஞ்சே

(கலி-123)
 

இவை தலைவி இரங்கிக் கூறியது.
 

உரிதென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த

பரிசழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த

நெய்யுள் மெழுகின் நிலையாது பைபயத்

தேயும் அளித்து என்உயிர்

(கலி-138)
 

என்பது தலைவன் இரங்கிக் கூறியது.
 

‘ஒன்றென  முடித்தல்’ என்பதனான்  தலைவியின் நிலை கருதித் தோழி
இரங்கிக் கூறலும் கொள்க.