சூ. 96 :

வண்டே இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ

நின்றவை களையும் கருவி என்ப.

(4)
 

க - து :

சிறந்துழி   ஐயுற்றதலைவன்  ஐயங்களைந்து துணிதற்குரிய கருவி
இவை என்கின்றது.
 

பொருள் :பயின்றதன்   மேலல்லது    செல்லாத   கொங்கு தேர்ந்து
தாதூதுதம்    வண்டும்,    கம்மியராற்    செய்யப் பெற்றதென விளங்கும்
அணிகலனும்,  தோளின்கண்    எழுதப்பெற்றுள்ள    தொய்யிற்கொடியும்,
செவ்விகுறைந்து   திகழும்    சூடியபூவும்    மருட்சியைப்  புலப்படுத்தும்
விழியும்,       செய்வதறியாது   புரியும்   தடுமாற்றமும்,   மூடித்திறக்கும்
இமையும், ஆராய்ச்சி   இன்மையான்   எழும் அச்சமும், அவைபோல்வன
பிறவும்   தலைவன்பால்   நிகழாநின்ற   ஐயத்தைக் களையும் கருவிகளாம்
என்று கூறுவர் புலவர்.
 

இவையாவும்     மானிட   மகளிர்க்கன்றித் தெய்வப் பெண்டிர் மாட்டு
அமையா என்பது   நூலானும்,   உய்த்துணர்வானும் அறியப்பட்டமையான்
ஐயங்களையும் கருவிகளாயின.   நிகழ  நின்ற    ஐகளையும் கருவி எனப்
பிரித்துப் பொருள் கொள்க.

 

ஐயம்   என்னும் பண்புரிச் சொற்கு முதனிலை ஐ என்பதேயாம். அஃது
பண்புப் பொருள் தரும் அம் என்னும் இறுதிநிலை இடைச்சொல்லொடு கூடி
ஐயம் எனப் பெயராக வரும். இதனைத் தேரான் தெளிவும் தெரிந்தான்கண்
ஐயுறவும் (குறள்) என வருவனவற்றானறிக. மொழியாக்க நெறியினை ஓராமல்
உரையாளர் ஐயம் என்பது    அதிகாரத்தான்     வந்ததெனக் கூறி ‘நிகழ
நின்றவை’    எனப்பன்மையாகப்    பொருள்     உரைத்துச்  சென்றனர்.
நச்சினார்க்கினியர் இதற்குக் கற்பனையாகப் பொருள்     விரித்து   மயங்க
வைப்பாராயினார்.
 

‘பிற’ என்றது, கால் நிலந்தோய்தல், தூசு மாசுறல்,   வியர்த்தல்,  நிழல்
சாய்தல் முதலியவற்றை. இவை கருவியாக ஐயம்   நீங்கிய     வழி இவள்
மானிடமகளே எனத் தெளிவானாகலின் துணிவும்  இதனாற்      பெறப்பட
வைத்தார் என்க.
 

எ - டு :

திருநுதல் வேர்வரும்பும் தேங்கோதை வாடும்

இருநிலஞ் சேவடியும் தோயும்-அரிபரந்த

போகிதழ் உண்கணும் இமைக்கும்

அகுமற்றிவள் அகலிடத் தணங்கே

(புறப்-வெ-கை-3)
 

எனவரும்.