102

யாப்பருங்கலக் காரிகை

 
  நேரிசையொத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க
வொத்தாழிசைக் கலிப்பா

30. தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய்
நிரலொன்றி னேரிசை யொத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோன்
மரபொன்று நேரடி முச்சீர் குறணடு 1வேமடுப்பின்
அரவொன்று மல்குல தம்போ தரங்கவொத் தாழிசையே.
 
     எ....கை. துள்ளல் ஓசைத்தாய், நேரீற்று இயற்சீரும் நிரை நடுவாகிய
வஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா வுரிச்சீர்மிக்கு நேரடித்தாய்,
தன்றளையும் (1) அயற்றளையுந் தட்டுத் தரவு தாழிசை 2என்னும் முதலுறுப்பும் அராகம்
அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகமென்னும் துணையுறுப்பு முடைத்தாய், (2) ஒத்
தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி என்னும் பெயர் வேறு பாட்டாற் கிடந்த
கலிப்பாவினை (3) உறுப்பினானும் ஓசையானும் பொருளானும் பெயர் வேறுபாடு
உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்.
 

     (1) தளைதட்டு - தளை பொருந்தி.

      (2) ஒத்தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி என்பன  கலிப்பாவின் மூன்று
வகைகள். இவற்றுள் ஒத்தாழிசைக் கலிப்பா (i) நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, (ii)
அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா, (iii) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என
மூன்று வகைப்படும். வெண்கலிப்பா ஒன்றேயாம்; கலிவெண்பா அதன் இனத்தது
என்றலுமாம். கொச்சக் கலிப்பா (i) தரவு கொச்சகக் கலிப்பா. (ii) தாவிணைக் கொச்சகக்
கலிப்பா, (iii) சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, (iv) பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா,
(v) மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என ஐவகைப்படும்.

      (3) உறுப்பினால் வந்த பெயர் : ஒத்தாழிசைக் கலிப்பா; ஒத்த தாழிசைகளை
யுடையதென்பது பொருள்; ஒப்பு, எல்லாத் தாழிசையும் ஒரு பொருண்மேல் வருதல்.
ஓசையால் வந்த பெயர் ; வெண்கலிப்பா. பொருளால் வந்த பெயர் கொச்சகக் கலிப்பா.
இவற்றின் பிரிவுகளில் மயங்கிசைக் கொச்சகம் என்பது பொருளால் வந்த பெயர்;
மற்றவை உறுப்பினால் வந்த பெயர்.
 

     (பி - ம்.) 1. வேமடுப்ப, தர, வந்தடுப்ப,தர 2. அராகம் அம்போ தரங்கம்
தனிச்சொல் சுரிதகம் என்னும் ஆறுறுப்பினையு முடைத்தாய்.