நாக்கு, காச்சு, காட்டு, காத்து, காப்பு, காற்று என நெடி லொற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. | வரகு, முரசு, முருடு, மருது, துரபு, கவறு எனக் குறிலிணைக் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. | அரக்கு, பொரிச்சு, தெருட்டு, குருத்து, பொருப்பு, சிரற்று எனக் குறிலிணையொற்றின் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. | அசோகு, பலாசு, மலாடு, கொடாது, புதாபு, விராறு எனக் குறினெடிற் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. | தமாக்கு, தடாச்சு, பனாட்டு, கொடாத்து, புதாப்பு, விராற்று எனக் குறினெடிலொற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. | நக்கு, கச்சு, கட்டு, கத்து, கப்பு, கற்று எனக் குற்றொற்றின் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. | குற்றியலுகர வெழுத்து ஆறுவகைப்படும் என்பாருமுளர். அவையாவன: ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர்மொழி இடைத்தொடர் மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி, ஆய்தத் தொடர் மொழி என்றிவை. என்னை? | | 'ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்' | என்றார் ஆகலின். | (தொல். எழுத். சூ. 406.) | இனிக் குற்றியலிகரத்துக்குச் சொல்லுமாறு : | குற்றியலுகரம் திரிந்தும் திரியாதும் யகரமோடு இயைபின் கண் வந்த இகரம் குற்றிய லிகரமென்று வழங்கப்படும் எ-று. என்னை? | |
|
|