ஒழிபியல் ' பொருளோ டடிமுத '

191

 

நேரிசை வெண்பா

['ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும்
பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி
விறன்முள்ளூர் வேங்கைவீ தானாணுந் தோளாள்
நிறனுள்ளூ ருள்ளு தலர்.'
 
     இதனுள் 'தண்ணுமை நாணும் தோளாள்' என்றும், 'நிறம் வேங்கை வீ' என்றும்,
'அலர் ஆரிய மன்னர் பறையின் எழுந் தியம்பும் முள்ளூர்' என்றும் சொற்களைக்
கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இதுவும் கொண்டு கூட்டுப் பொருள்
கோள் ஆயிற்று.]
 

(8) குறிப்பிசை

     இனி, குறிப்பிசை என்பது எழுத்திலோசையான் வந்த (39) முற்கும் வீளையும்
இலதையும் அனுகரணமும் முதலாக உடையன செய்யுளகத்து வந்தால் அவற்றையும்
செய்யுள் நடை அழியாமல் அசையும் சீரும் அடியும் தொடையும் பிழையாமல் கொண்டு
அலகிட்டு வழங்கப்படும் எ - று.
 

வரலாறு

நேரிசை வெண்பா

' (40) மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
கென்று திரியு மிடைமகனே - சென்று
மறியாட்டை யுண்ணாமல் வன்கையால் வல்லே
அறியாயோ வண்ணாக்கு மாறு'
 
எனக் கொள்க.

     ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய (41) ஊசிமுறி யுள்ளும் பிறவற்றுள்ளும்
கண்டுகொள்க. என்னை?

     பலவடிகளில் மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டு என்று
இவை தம்முள் வேறுபாடு உணர்க.
 

     (39) முற்கு - முக்குதலின் ஒலி. வீளை - சீழ்க்கையடித்தலின் ஓசை இலதை,
அனுகரணம் - ஒலிக்குறிப்பு ; ஒப்பாகத் தோன்றுவது என்பது பொருள்.

     (40) மறி - ஆட்டுக்குட்டி, அண்ணாக்கும் ஆறு - தலையை நிமிர்க்கும் விதத்தை.
'ஆட்டை மறி யுண்ணாமல்' என்று கூட்டுக.

     (41) இத்தொடர் எல்லாச் சுவடிகளிலும் 'ஆசிரிய முறி' என்றே காணப்படுகிறது.