115. இதுவுமது
செருமதிலோர் சிறப்புரைத்தலும்
அருமுரணா னத்துறையாகும்.

(இ - ள்.) போரைச் செய்யும் எயிலினுள்ளோருடைய மிகுதியைக் கூறலும் வெல்லுதற்கரிய மாறுபாட்டாலே முன்புசொன்ன துறையேயாம் எ-று.

(வ - று.)
அறியார் வயவ ரகத்திழிந்த பின்னும்
நெறியார் நெடுமதிலு ணேரார்-மறியாம்
கிளியொடு நேராங் கிளவியார் வாட்கட்
களியுறு காமங் கலந்து.

(இ - ள்.) உணரார் நொச்சிவீரர்; அரணினுள்ளே புகுந்தபின்னும், முடங்குதல் நிறைந்த நெடும்புரிசையுட் பகைவர், மான்மறியாம் கிளியை யொத்த சொல்லினையுடையார் ஒளியினையுடைய கண்ணின் களிப்புற்ற வேட்கை விரவுதலான் எ-று.

நேரார்மதிலகத்து இழிந்தபின்னும் வயவரறியார் எனவும் , மறியாம் வாட்கண் எனவும் கூட்டுக.

(21)