119. வேற்றுப்படை வரவு
மொய்திகழ் வேலோன் முற்றுவிட் டகலப்
பெய்தார் மார்பிற் பிறன்வர வுரைத்தன்று.

(இ - ள்.) போர்மிகும் வேலோன் சூழ்தல்விட்டுப் போக இட்ட மாலைமார்பினையுடைய வேற்றுவேந்தன் வரவினைச் சொல்லியது எ-று.

(வ - று.)
உவனின் றுறுதுயர முய்யாமை நோக்கி
அவனென் றுலகேத்து மாண்மை -இவனன்றி
மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம்
முற்றியார் முற்று விட.

(இ - ள்.) உவன் இற்றைநாளிலே பொருந்தும் விதனத்தினின்றும் ஒழியாமையைப் பார்த்து அப்படிக் கொடுத்தவனென்று சொல்லி உயர்ந் தோர் புகழும் ஆண்மைத்தன்மையினையுடைய இவனல்லது மற்று யாவர் இது செய்யவல்லார்! மேகம் உறங்கும் நீண்ட மதிலைச் சூழுப்போனார் வளைவு விட எ-று.

(25)