127. தும்பை
செங்களத்து மறங்கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்று.

(இ - ள்.) குருதியாற் சிவந்த களத்து மாறுபாட்டை நினைந்து பசுந்தும்பையாகிய 1போர்ப்பூவை முடியிடத்துச் சூடியது எ-று.

(வ - று.)
கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலநனைப்பப் - பார்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர்
வெப்புடைத் தானையெம் வேந்து .

(இ - ள்.) மேகத்தை ஒப்புக்குறித்து ஒழியாதுநின்று முழங்கும் ஆரவாரத்தாற் சிறந்த சீரிய வீரமுரசினையுடையான் , ஒழுகுங்குருதி சூழ்ந்து பொருகளத்தை நனைப்பப் பூசலை நினைந்து வலியையுடைய தும்பை மாலையைச் சூடினான்; குற்றந்தீர்ந்த புகழினையும் வெம்மை மிக்க சேனையினையும் உடைய எம் மன்னன் எ-று.

(1)

1. போர்ப்பூ : பு - வெ . 241; மதுரைக். 596, ந.