134. தார்நிலை
முன்னெழுதரு படைதாங்குவனென
மன்னவற்கு மறங்கிளந்தன்று.

(இ - ள்.) தூசிப்படையைத் தடுப்பனென அரசற்கு ஒரு வீரன் தனது தறுகண்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின்
சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் - எறிசுடர்வேற்
றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்தே நின்னோடு
பாங்கலா மன்னர் படை .

(இ - ள்.) மிக்க ஒளியினையுடைய வாளுடனே யான் ஒருகால் தடுப்பிற் சிறிய விளக்கின் முன்னர் பெரிய இருள்போல இரிந்தோடுங் காண்; எறியும் கதிர்வேலினையும் மதுமலர்ந்த பூமாலையினையுமுடைய தேர் மன்னனே. நின்னோடு உறவல்லாத வேந்தர்சேனை எ-று.

(8)