136. தேர்மறம்
முறிமலர்த்தார் வயவேந்தன்
செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) தளிர் விரவின பூமாலையினையுடைய வலிய மன்னன் மிடைந்த மணித்தேரின் நன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ளம்
அருமுர ணாழி 1தொடர - வருமரோ
கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தேர்
ஒட்டார் புறத்தின்மே லூர்ந்து .

(இ - ள்.) போர்மிகும் வெய்ய பறந்தலையிடத்துச் சிவந்த உதிரவெள்ளம் கிட்டுதற்கரிய மாறுபாட்டினையுடைய தேர்க்காலைத்தொடரவாரா நிற்கும்; சுற்றுதல் நிறைந்த நாறும் மாலையினையுடைய அரசன்றன் அழகிய தேர் , பகைவர் பிணப்புறத்தின்மேல் நடந்து எ-று.

அரோ : அசை.

(10)

1. துடர