152. 1தன்னை வேட்டல்
தம்மிறைவன் விசும்படைந்தென
வெம்முரணா னுயிர்வேட்டன்று.

(இ - ள்.) தம் வேந்தன் விசும்பைச் சேர்ந்தானாக , வெய்ய மாறுபாட்டை யுடையானொருவீரன் உயிரை ஆகுதிபண்ணியது எ-று.

(வ - று.)
2வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா
மானமே நெய்யா மறம்விறகாத்- தேனிமிரும்
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
ஒள்ளழலுள் வேட்டா னுயிர்.

(இ - ள்.) விண்ணிடத்து வேந்தன் சென்றானாக, வாளே சுருவமாக அபிமானம் ஓமநெய்யாக மறமே சமிதையாக வண்டுபரக்கும் மது மலர்ந்த மாலையினையும் வீரக்கழலினையுமுடைய வெவ்வியோன் வாட்போராகிய ஒள்ளிய தீயுள் உயிரை ஆகுதிபண்ணினான் எ-று.

(26)

1. இத்துறை தன்னுறுதொழிலின்பாற் படும்.
2. தொல். புறத். சூ. 14, இளம், மேற்.