159. மறக்களவழி
முழவுறழ் திணிதோளானை
உழவனாக வுரைமலிந்தன்று.

(இ - ள்.) முழவுபோலத் திரண்ட திண்ணிய புயத்தினையுடையானை உழும் வேளாளனாக மிகுத்துச் சொல்லியது எ-று.

(வ - று.)
1அஞ்சுவரு தானை யமரென்னு நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும் - செஞ்சுடர்வேற்
பைங்கட் பணைத்தாட் பகட்டுழவ னல்கலான்
எங்கட் கடையா விடர்.

(இ - ள்.) கண்டார் வெருவும் சேனையாகிய வரம்பையுடைய போர்க்களமென்னும் நீண்ட செறுவினுள் வெய்ய செற்றமென்னும் வித்தை விதைத்துக் கீர்த்தியை விளைக்கும் சிவந்த ஒளிவேலாகிய கோலினையுடைய பச்சென்ற கண்ணிணாலும் பெருத்த தாளினாலும் சிறந்த யானையாகிய ஏருழவன் அளித்தலால் எம்போல்வார்க்கு வறுமையடையா எ-று.

இது 2மாட்டேறில்லா உருவகம்.பைங்கண்:பண்பு.

(5)

1. இந்த வெண்பா ஏகதேச உருவகத்திற்கு மேற்கோள்; மாறன். ப. 178.
2. (பி-ம்.)மாட்டேற்றில்லா, மாட்டேறேலா