16. கொடை
ஈண்டியநிரை யொழிவின்றி
வேண்டியோர்க்கு விரும்பிவீசின்று.

(இ - ள்.) திரண்ட பசுநிரையொன்றும் தப்பாமே தம்மை வேண்டினவர்களுக்குப் பிரியப்பட்டுக் கொடுத்தது எ-று.

(வ - று.)
அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண்
வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட்
செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி
வரிச்சிலையாற் றந்த வளம்.

(இ - ள்.) அழகிய கண்ணாற் சிறந்த கிணையையுடையவனும் துடி கொட்டுமவனும் பாணிச்சியும் பாணனும் வெவ்விய கள்ளிற்குக் கொடுக்கும் விலையாகும், சிவந்த கண்ணினையுடையராய்ப் போர்க்கு இடையாத மன்னர் பூசன்முகத்துக் கோபித்து வரிதலையுடைய வில்லாலே கொண்ட ஆனிரையாகிய செல்வம் எ-று.

வளம் வெங்கட்கு வீசும் விலையாகுமெனக் கூட்டுக.

(16)