166. பொருந வாகை
புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்த லோம்பென வெடுத்துரைத் தன்று.

(இ - ள்.) நின் கீர்த்தியொடு மிகுதியைப் பார்த்து யாவரையும் எள்ளுதலைப் பரிகரியென்று உயர்த்திச் சொல்லியது எ-று.

(வ - று.)
வெள்ளம்போற் றானை வியந்து விரவாரை
எள்ளி யுணர்த லியல்பன்று-தெள்ளியார்
ஆறுமே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார்
நீறுமேற் பூத்த நெருப்பு.

(இ - ள்.) கடல் போன்ற சேனையினையுடையேம் யாமென்று மதித்துப் பகைவரை இகழ்ந்து அறியுமது தன்மையன்று; தெண்மையுடையார், வெம்மையாறுமாயின் ஆறியபின் அல்லது தங்கள் கையில் ஏந்தார், பொடி மூடிய தழலை எ-று.

(12)