கூற்றனையான் வியன்கட்டூர்க் கூதிர்வான் 1றுளிவழங்க ஆற்றாமை நனிபெருகவு மயில்வேலா னளிதுறந்தன்று. (இ - ள்.) கூற்றையொத்தவனுடைய அகன்ற பாசறையிடத்துக் கூதிர்காலத்து மேகம் உறையைக்கொடுப்பப் பிரிவாற்றாமை மேன்மேன் மிகவும் கூரிய எஃகினையுடையான் கருணையை ஒழிந்தது எ-று. (வ - று.) 2கவலை மறுகிற் கடுங்கண் மறவர் உவலைசெய் கூரை யொடுங்கத் - துவலைசெய் கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான் மூதின் மடவாண் முயக்கு . (இ - ள்.) கவர்த்த தெருவிடத்துத் தறுகண் வீரர் தழையாற் பண்ணின கூரையிடத்திலேயடங்கச் சிறுதுளியைப் பண்ணும் கூதிர்க்காலம் வருத்தவும் நினையான் , பதாகையாற் பொலிந்த தேரினையுடையான் , பழைய மனையில் , மனைக்கிழத்தி புணர்தலை எ-று. (15)
1. தொல். பொருளியல், சூ. 28. 2. தொல். புறத். சூ. 17, இளம். மேற். |