17. புலனறி சிறப்பு
வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத்
தம்மினுமிகச் சிறப்பீந்தன்று.

(இ - ள்.) வெவ்விய வேற்றுப்புலத்தினது நிலைமையை அறிவித்தார்க்குத் தம்முடைய கூற்றினும் பெருகச் சிறப்புக் கொடுத்தது எ-று.

(வ - று.)
இறுமுறை யெண்ணா திரவும் பகலும்
செறுமுனையுட் சென்றறிந்து வந்தார் - பெறுமுறையின்
அட்டுக் கனலு மயில்வேலோ யொன்றிரண்
டிட்டுக் கொடுத்த லியல்பு.

(இ - ள்.) தாம் இறும்வகையை ஆராயாதே இரவின்கண்ணும் பகலின் கண்ணும் கொல்லும் பகைப்புலத்துப் போய்ஆராய்ந்துவந்தார் பெறக்கடவ பங்கின்மேலும் கொன்று எரியும் கூர்வேலினையுடையோய்,ஒன்றாதல் இரண்டாதல் பசு ஏற்றிக்கொடுத்தல் முறைமை எ-று.

(17)