178. காவன் முல்லை
தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிக்
கமழ்தார் மன்னவன் காவன்மிகுத் தன்று.

(இ - ள்.) ஊருந்திரை ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலை வேலியாக உடைய ஞாலத்து மணநாறுமாலையினையுடைய வேந்தன் பாதுகாத்தலைச் சிறப்பித்தது எ-று.

(வ - று.)
பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான்
ஒருநாண் மடியி னுலகின்மே னில்லா
திருநால் வகையா ரியல்பு .

(இ - ள்.) பெரிய ஆபரணத்தினையும் நல்லோரிடத்துத் தலைவணக் கத்தினையும் மலரிட்டுத் தொடுத்த பசியமாலையினையும் வலிய வீரக்கழலினையும் தவளசத்திரத்தினையுமுடையவன் நாடு காத்தற்றொழில் வேண்டானாகி ஒரு வைகல் உள்ளமடியிற் பூமிமேற்றங்காது , குடிப்பிறப்பு முதலாகிய எண்வகையியல்புடைய சான்றோர் தன்மை எ-று.

இயல்பு நில்லாதென்க.

(24)