மண்கொண்ட மறவேந்தன் கண்படைநிலை மலிந்தன்று. (இ - ள்.) வென்று பூமியைக் கைக்கொண்ட சினமன்னன் உறக்கத்தை மிகுத்தது எ-று. (வ - று.) கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக் கூற்றணங்கும் வெங்கதிர்வேற் றண்டெரியல் வேந்தற்குப் - பொங்கும் புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைகக் கனலா துயிலேற்ற கண் . (இ - ள்.) திறைகொடாத மதுமலர்ந்த மாலைவேந்தரும் திறைகொடுப்ப இயமனைவருத்தும் வெய்ய ஒளிவேலினையும் குளிர்ந்தமாலையினையுமுடைய அரசனுக்கு மீதெழும் கடலாகிய புடைவையையுடைய நிலமகளும் கைசெய்த குடைக்கீழ் தங்குதலான் அழலாவாய் உறக்கத்தை எதிர்ந்தன, விழிகள் எ-று. (29) |