கறவை காவல னிறனொடு பொரீஇப் புறவலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று. (இ - ள்.) ஆனிரையைக் காத்த மாயவன் திருவுருவோடு உவமித்துக் காட்டிடத்தலரும் காயாம்பூவைப் புகழ்ந்தது எ-று. (வ - று.) 1பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம் - மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருதலான். (இ - ள்.) காயா மலரும் செவ்விப்பூப்போல, பொலிந்த வீரக்கழலினையுடையோய், எப்பொருள் சீரியவை? யாங்கள் அறியேம்; பகைவர் சினத்துடனே வஞ்ச மல்லரது மாறுபாட்டை வென்ற இளமைப் பருவத்து மாயவனது திருமேனியோடு உவமைகொள்கையால் எ-று. (4)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்; இ.வி.புறத்.சூ.19, மேற். |