193. பரிசிற்றுறை
மண்ணகங் காவன் மன்னன் முன்னர்
எண்ணிய பரிசி லிதுவென வுரைத்தன்று.

(இ - ள்.) பூமியிடத்தைக் காக்கும் தொழிலையுடைய அரசன் முன்னே கருதிய இதுவெனச் சொல்லியது எ-று.

(வ - று.)
வரிசை கருதாது வான்போற் றடக்கைக்
குரிசினீ நல்கயாங் கொள்ளும் - பரிசில்
அடுகள மார்ப்ப வமரோட்டித் தந்ந
படுகளி நால்வாய்ப் பகடு.

(இ - ள்.) எங்கள் தரத்தினை நினையாதே, மழையை யொக்க வழங்கும் பெரிய கையினையுடைய உபகாரி, நீ வழங்க யாங்கள்பெறும் பேறு கொல்லும் களரியிலே ஆரவாரிப்பப் போரிடத்தே பகைவரைக் கெடுத்துக் கைக்கொண்ட உண்டான மதத்தினையும் நான்ற வாயினையுமுடைய யானை எ-று.

யானை யாம் கொள்ளும் பரிசிலென்க.

(5)