அளப்பருங் கடற்றானையான் விளக்குநிலை விரித்துரைத்தன்று. (இ - ள்.) அளத்தற்கரிய கடல்போன்ற சேனையினையுடையான்றனது விளக்கினது நிலையைப் பரப்பிச் சொல்லியது எ-று. (வ - று.) 1வளிதுரந்த கண்ணும் வலந்திரியாப் பொங்கி ஒளிசிறந் தோங்கி வரலால் - அளிசிறந்து நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு. (இ - ள்.) காற்றெறிந்தவிடத்தும் வலமாகச் சுழன்றெழுந்து சோதிவிட்டு உயர்ந்துவருவதால், தண்ணளியைமிகுத்து அழகிய வழியைக் காட்டவல்ல நன்றியை ஆராயும் செங்கோலினையுடைய வேந்தற்கு வெல்லு முறைமையே காட்டாநிற்கும் விளக்கு எ-று. (12) |