209. குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை
நெடுமதி லெறிந்து நிரைதார் மன்னன்
கடுமி களைந்த மலிவுரைத் தன்று.

(இ - ள்.) நீண்ட அரணினையழித்து நிரைத்த மாலையினையுடைய வேந்தன் குடுமி களைந்த மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1பூந்தா மரையிற் பொடித்துப் புகல்விசும்பின்
வேந்தனை வென்றான் விறன்முருகன் - ஏந்தும்
நெடுமதில் கொண்டு நிலமிசையோ ரேத்தக்
2குடுமி களைந்தானெங் கோ.

(இ - ள்.) பொலிவினையுடைய சரவணப்பொய்கையில் தாமரைப் பூவிலே தோன்றி வெற்றியாலுயர்ந்த விண்ணுலகத்தில் இந்திரனைவென்றான், வெற்றியினையுடைய குமரவேள்; அழகேந்தும் உயரிய அரணைக் கைக்கொண்டு பூமியிலுள்ளோர் வாழ்த்தத் தன்மயிர்ச்சிகையைக் கூட்டி முடித்தான், எம்மன்னன் எ-று.

மதிலரசர் மணிமுடி கடந்தானென்றுமாம்.

(21)

1. பரி. 5 : 49 - 56.
2. புறநா. 77: 2: கூர்ம. சுவேதவராசு. 5.