வாலிழையோர் வினைமுடிய வேலனொடு வெறியாடின்று. (இ - ள்.) அழகிய ஆபரணத்தையுடையார் நினைத்த தொழில் முடிய முருகபூசை பண்ணுமவனொடு 1வள்ளிக்கூத்தை ஆடியது எ-று. (வ - று.) காணிலரனுங் களிக்குங் கழன்மறவன் பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண் - வாணுதல் தான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப வேன்முருகற் காடும் வெறி. (இ - ள்.) கண்டானாயின் நிருத்தப்பிரியனாகிய நீலகண்டனும் மகிழ்வன்; கட்டும் கழலினையுடைய மறவிளையாளன்றன் ஆபரணம் விளங்கும் மெல்லிய முலையினையும் பூப்போன்ற அரிபரந்த கண்ணினையும் ஒளி மிக்க நுதலினையுமுடையவள்தான் நறுநாற்றத்தை உடம்பிலே நிறுத்தி மாலை பக்கத்தே அசைய வேலினையுடைய பிள்ளையார்க்கு ஆடும் வள்ளிக்கூத்தை எ - று. வள்ளிக்கூத்தைக் காணின் அரனும் களிக்குமென்க. (21)
1. வள்ளிநாயகியின் வேடங்கொண்டு ஆடும் கூத்து. |