214. பரிசில்விடை
வேந்தனுண் மகிழ வெல்புக ழறைந்தோர்க்
கீந்து பரிசி லின்புற விடுத்தன்று.

(இ - ள்.) அரசனுடைய மனங்களிப்ப வெல்லும்புகழைச் சொன்னோர்க்குப் பெறும் பேற்றை வழங்கி இனிமைமிக விடைகொடுத்தது எ-று.

(வ - று.)
படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரும்
நடைநவின்ற பாய்மாவு நல்கிக் - கடையிறந்து
முன்வந்த மன்னர் 1முடிவணங்குஞ் சேவடியாற்
2பின்வந்தான் பேரருளி னான

(இ - ள்.) பல்லணங்கெழுமிய பல யானையையும் பூட்டமைந்த தேரினையும் தாளத்திற்கொத்த நடைபொருந்திய குதிரையையும் வழங்கிக் கடைகழிந்து முற்படவந்த வேந்தர் முடிபணியும் சிவந்த பாதத்தாலே நடந்து என்பின்னே வந்தான், மிக்க அருளினையுடையனான வேந்தன் எ-று.

பின்வந்த மன்னர்க்கு இடம் கிடையாதாம்.

(26)

1. மன்னர்தம், முடியொடு முடிபொரு வாயின் முன்னினார் (கம்ப. எழுச்சி.1.)
2. பின்வருதல்: பொருந.166.