22. கரந்தை
மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத்
தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று.

(இ - ள்.) மாறுபட்டெழுந்தார் மாற்சரியங் கெடக் கைப்பற்றின நிரையை மீட்டது எ-று.

(வ - று.)
1அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண் டற்றாற் - செழுங்குடிகள்
தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோடல்
நேரார்கைக் கொண்ட நிரை.

(இ - ள்.) ஆரவாரியாநின்ற கடல்சூழ்ந்த ஞாலத்துப் பெறுதற்கரிய உயிரைக் கூற்றுவன் உண்டபின்பு மீட்ட தன்மைத்து; வளப்பத்தினை யுடைய மறக்குடிகள் 2கொப்புநிறைந்த கரந்தையைத் தலையிலேசூடித் தாங்கொள்ளுமது, பகைவர் கைப்பற்றின ஆனிரையை எ - று.

கோடல் வீடுகொண்டற்றென்க. ஆல் : ஆசை. தாம் கோடலைப் பொறாத வெட்சியார் கையினின்றும் கொள்ளப்பட்டன நிரை; இது வீடு கொண்டற்றென்றுமாம்.

(1)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்.
2. கொத்து