நாற்றிசையும் புகழ்பெருக வீற்றிருந்தான் குடைபுகழ்ந்தன்று. (இ - ள்.) நான்கு திக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசன் குடையைப்புகழ்ந்தது எ-று. (வ - று.) தன்னிழலோ ரெல்லோருந் தண்கதிராந் தற்சேரா வெந்திழலோ ரெல்லார்க்கும் வெங்கதிராம்-இன்னிழல்வேல் 1மூவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன் கோவா யுயர்த்த குடை. (இ - ள்.) தன்னுடைய நிழலில் வாழ்வார் பலருக்கும் குளிர்ந்த நிறை மதியாம்; தன்னைச்சேராத வெய்ய நிழலாராகிய பகையிடத்துள்ளார் பலர்க்கும் வெவ்விய இரவியாம்; இனிய நிழல்விடும் வேலினையும் என்றும் புதிதாய் வரும் சீரிய கீர்த்தியையும் வெற்றிமாலையினையுமுடைய சோழன் அரசு தொழிற்கமைந்து உயர்ந்த கொற்றக்குடை எ-று. (34)
1. பு-வெ.158. |