227. கொடிநிலை
மூவர்கொடி யுள்ளு மொன்றொடு பொரீஇ
மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று.

(இ - ள்.) அரி அயன் அரனென்னும் மூவர்கொடியுள்ளும் ஒன்றொடு உவமித்துப் பலரும் பொருத்துதல்வரும் வேந்தனுடைய கொடியைப் புகழ்ந்த்து எ-று.

(வ - று.)
1பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
2பாம்புண் பறவைக் கொடிபோல -ஓங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி.

(இ - ள்.) பொலிந்த கண்ணினையும் நெடிய திருமுடியினையும் காயாவின் மலர் போன்ற திருமேனியினையுமுடைய மாயவன் பாம்பை யருந்தும் கருடக்கொடியை யொப்ப உயர்க; பலவாரணத்தையுடைய வேந்தர் வணங்கக் குளிர்ந்த பூவாற்செய்த மாலையினையும் கொல்லுங் களிற்றினையுமுடைய வேந்தன்றன் வீரக்கொடி எ-று.

வீரக்கொடி ஓங்குகவென்க.

(39)

1. தொல் , புறத் .சூ.27, இளம். மேற்; சூ.31, ந. மேற்.
2. முருகு. 150-51; பரி . 4:41-2.