23. கரந்தை யரவம்
1நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய
2விரைவனர் குழூஉம் வகையுரைத் தன்று.

(இ - ள்.) பசுநிரையைக் கைப்பற்றினமை கேட்டுச் செய்யாநின்ற காரியம் தவிரக் கடுகினராகித் திரளுங் கூறுபாட்டைச் சொல்லியது எ-று.

(வ - று.)
3காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு.

(இ - ள்.) காலிலை நிறைந்த வீரக்கழலினையுடையார், கொடிய வில்லினையுடையார், கையிலேயெடுத்த வேலினையுடையார், அஞ்சத்தக்க காட்சியினையுடையார், கூற்றுவன் கோபித்தாலுமொப்பார், தடாரி யோசையைக் கேட்டு அசைந்தார்; வெட்சியார் கொண்ட ஆனிரை மீள்கையும் கூடும் எ-று.

(2)

1. சீவக. 428, ந. மேற். 2. விரையினர், விரையுனர் 3. நன். சூ. 354, மயிலை. மேற்.