வயங்கியபுகழ் வானவனைப் பயன்கருதிப் 1பழிச்சினர்ப் பணிந்தன்று. (இ - ள்.) விளங்கிய கீர்த்தியையுடைய இறைவனைப் பெறும் பேற்றை நினைந்து வாழ்த்தினராய் வணங்கியது எ-று. (வ - று.) ஆட லமர்ந்தா னடியடைந்தா ரென்பெறார் ஓடரி யுண்க ணுமையொருபாற்-கூடிய சீர்சா லகலத்தைச் செங்க ணழனாகம் தாராய்த் தழுவப் பெறும். (இ - ள்.) திருக் கூத்தாடுதலை மேவினவன் சீர்பாதங்களைச் சேர்ந்தார் என்பெறார் ? செவ்வரி கருவரிபரந்த மையுண்கண்ணினையுடைய உமாதேவி ஒரு பக்கத்தே பொருந்திய விழுப்பம் அமைந்த திருமார்பத்தைச் சிவந்த கண்ணினையுடைத்தாய் அழலும் பாம்பு மாலையாய்ப் பொருந்தப்பெறும் எ-று. ஆதலால், ஆடலமர்ந்தான் அடியடைந்தார் என்பெறாரென்க. (44)
1. பழிச்சினர் பணிந்தன்று |