233. கைக்கிளை
தண்டாக் காதற் றளரிய றலைவன்
வண்டார் விரும்பிய வகையுரைத் தன்று

(இ - ள்.) கெடாத அன்பினையும் நுடங்குந்தன்மையினையுமுடையவள், தலைவனுடைய வளவிய மாலையை ஆசைப்பட்ட கூறுபாட்டைச் சொல்லியது எ-று.

(வ - று.)
மங்குன் மனங்கவர மான்மாலை நின்றேற்குப்
பொங்கு மருவிப் புனனாடன் - கங்குல்
வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித்
தருவான்கொன் மார்பணிந்த தார்.

(இ - ள்.) சிறுதுவலை துவற்றும் கார் என்னெஞ்சைக்கொள்ள மயக்கத்தைச் செய்யும் மாலைப்பொழுதிலே தனியே நின்றேற்கு மிகும் ஒழுக்கத்தினையுடைய நீராற் சிறந்த நாடனாகிய சோழன் இரவுப்பொழுதிடத்து வருவான்கொல் ? வந்து என்னுடைய அழகிய கொங்கை மேலே தங்கித் தருவான்கொல், மார்பினணிந்த மாலையை? எ-று.

(45)