237. கடவுண்மாட்டு மானிடப்பெண்டிர் நயந்தபக்கம்
முக்கணான் முயக்கம்வேட்ட
மக்கட்பெண்டிர் மலிவுரைத்தன்று.

(இ - ள்.) மூன்று திருநயனத்தையுடையானது புல்லுதலை விரும்பின மானிடமகளிர் கூறுபாட்டைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாகம்
புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு
பண்ணலங்கூட்டுண்ணும் பனிமலர்ப் பாசூரென்
உண்ணலங் கூட்டுண்டா னூர்.

(இ - ள்.) செவ்வரி கருவரி பரந்த விழிசிவப்பக் 2கனவில் என்னுடைய மார்பினை முறுக்குதலுடைத்தான பூணூற்றழும்புபடப் புல்லி,வரியினையுடைய சுரும்பினம் பண்ணின் நலத்தைப் பாடித் திரண்டு அனுபவிக்கும் குளிர்ந்த பூவினையுடைய திருப்பாசூர், என்னுடைய மனத்தின் அழகைச் சிறிதும் ஒழியாமல் நுகர்ந்தவனுடைய பதி எ-று.

(49)

1. தொல். புறத். சூ 23. இளம். மேற்.
2. இராப்பொழுதில்