247. கற்காண்டல்
ஆனா வென்றி யமரில்வீழ்ந் தோற்குக்
கான நீளிடைக் கற்கண் டன்று .

(இ - ள்.) அமையாத வெற்றியையுடைய பூசலிற் பட்டோற்குக் காட்டில் நீண்டவிடத்துக் கல்லைக் கண்டது எ-று.

(வ - று.)
1மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்திப் - பகையணங்கும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காளைக்குக் கண்டமைத்தார் கல்.

(இ - ள்.) மிக்க தெய்வத்தை உடம்பிலே நிறுத்தித் தலைமையினை யுடைய வீரர் தூமமணி ஆர்ப்ப மலர்மழையைச் சிதறிச் சத்துருக்களை வருத்தும் சத்தத்தினையுடைய கொடிய அம்பாலே வேறுபட்டு விண்ணிடத்துச் சென்ற இளமைப்பருவத்து வீரனுக்குப் பார்த்து நிச்சயித்தார், கல்லினை எ-று.

(8)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்.