251. கன்னடுதல்
அவன்பெயர்கன் மிசைப்பொறித்துக்
கவின்பெறக் கன்னாட்டின்று.

(இ - ள்.) வீரன் நாமத்தைக் கல்லிலே எழுதி அழகுபெறக் கல்லை நட்டது எ-று.

(வ - று.)
1மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி யணிந்து பெயர்பொறித்து - வேலமருள்
ஆண்டக நின்ற வமர்வெய்யோற் காகென்று
காண்டக நாட்டினார் கல் .

(இ - ள்.) மாலையசையத் தூமமணியைக் கறங்கப்பண்ணி மதுவைத் தெளித்துப் பீலியைச் சூட்டி அவன்பெயரை எழுதி வேற்பூசலிடத்து ஆண்மைத்தன்மை மிகுதிபெற நின்ற போரை விரும்பினவனுக்கு இஃது உருவமாகவென்று சொல்லிக் காட்சிபொருந்த நட்டார் கல்லினை எ-று.

(12)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்