மூதரி னிவந்த முதுகழை யாரிடைக் காதலி யிழந்த கணவனிலை யுரைத்தன்று. (இ - ள்.) முதிர்ந்த பிணக்கமோங்கிய முற்றின மூங்கிலையுடைத்தாய் நிறைந்த இடத்திலே தலைவியை இழந்த தலைவன் முறையைச் சொல்லியது எ-று. (வ - று.) உரவெரி வேய்ந்த வுருப்பவிர் கானுள் வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய் - கரவினால் பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை யென்மார்பிற் கோதையைக் கொண்டொளித்த கூற்று. (இ - ள்.) உலாவும் நெருப்புமூடின வெப்புமிகுங் காட்டிடத்து என் முன்னே நீ வருதலை ஏற்பாயாயின், என்னுடைய கூரியவேலின் வாயிலே வீழ்வாய்; களவாலே , மடவாளைப் பெண்மைத்தன்மையுடையாளை இட்டவளையினையுடையாளை என்னுடைய மார்பின்மாலையை மறைத்துக் கொண்ட கூற்றமே எ-று. (2) |