259. பூசன்மயக்கு
பல்லிதழ் மழைக்கட் பாலகன் மாய்ந்தெனப்
புல்லிய பெருங்கிளைப் பூசல்கூ றின்று

(இ - ள்.) பூவையொத்து மழைபோலக் குளிர்ந்த கண்ணினையுடைய பிள்ளை இறந்தானாகப் பொருந்திய பெரிய சுற்றத்தினது ஆரவாரத்தினைச் சொல்லியது எ-று.

பல்லிதழென்றார் பல இதழினையுடைய பூவை,ஆகுபெயரான்.

(வ - று.)
அலர்முலை யஞ்சொ 1லவணொழிய வவ்விற்
குலமுதலைக் கொண்டொளித்த லன்றி- நிலமுறப்
புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ
கொல்லிய வந்தொழியாக் கூற்று.

(இ - ள்.) பணைத்த முலையினையும் அழகிய சொல்லினையுமுடைய தலைவி அவ்விடத்தே ஒழிய அம்மனையிற் குலத்திற்கு மூலமாகிய பிள்ளையைக் கைப்பற்றி மறைத்தலல்லது நிலத்திலே மிகப் பொருந்திய சுற்றத்தின் ஆரவாரத்திற்கு இரங்குமோ? கொல்வான்வேண்டி வந்து தவிராத கூற்றம் எ-று.

கூற்று, பூசல் பரியுமோவென்க.

(6)

1. லவளொழிய