வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும் ஆய்ந்த புலவ ரதுவென மொழிப. (இ - ள்.) அரசன் இறந்தானாக அகன்ற பூமியினுள்ளார் இரங்கினும் ஆராய்ந்த அறிவினையுடையோர் முன்பிற்றுறையென்று சொல்லுவர் எ-று. (வ - று.) எண்ணி னிகல்புரிந்தோ ரெய்தாத தில்போலும் கண்ணினொளிர் வேலான் கரந்தபின் -அண்ணல் புகழொடு பூசன் மயங்கிற்றாற் பொங்கும் அகழ்கடல் வேலி யகத்து. (இ - ள்.) விசாரிப்பிற் போரினை விரும்பிய வீரர் பெறாதது ஒன்றுமில்லை போலும் : கண்ணிற்கு எறிக்கும் வேலினையுடையான் இறந்த பின்பு தலைவனுடைய கீர்த்தியுடன் ஆரவாரம் தலைமணந்ததால், மிகா நின்ற அகழ்ந்த கடலை வேலியாகவுடைய பூமியிடத்து எ-று. பூமியிடத்துப் புகழொடு பூசல் மயங்கிற்றாலென்க. (7) |