கயலேர் கண்ணி கணவனொடு முடிய வியனெறிச் செல்வோர் வியந்துரைத் தன்று. (இ - ள்.) கயலையொத்த விழியினையுடையாள் தன் கொழுநனோடு இறந்துபட அகன்ற வழியிடத்துப் போவார் கண்டு அதிசயித்துச் சொல்லியது எ-று. (வ - று.) 1ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும் உடனே யுலந்த துயிர். (இ - ள்.) ஒரு பிராணனாக அறிக, ஒக்க மணந்தவர்க்கு; இரண்டு பிராணனென்று சொல்லுவர் நடு ஆராயாதார்; பூசலிடத்து நஞ்சைத் தாங்கும் வேலினையுடையாற்கும் விளர்த்த வளையினை யுடையாட்கும் ஒக்க விட்டது பிராணன், ஆதலால் எ-று. (9)
1. தொல். புறத். சூ.19, இளம்.; சூ.24, ந. மேற்.; திருச்சிற்.71; சீவக. 2344; சிலப். 25 : 78-86. |