கொடியான் கூர்ங்கணை குளிப்பத் தன்றொழில் முடியா னவிதலு மூதா னந்தம் (இ - ள்.) கடுவினையாளன் தன்மேற் பகைவருடைய கூரிய அம்பு அழுந்தத் தான் நினைந்த வினையை முடிவு செய்யானாகி இறத்தலும் மூதானந்தம் எ-று. (வ - று.) முந்தத்தான் மாவொடு புக்க முனையமருட் சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக்-குந்தத்தாற் செல்கணை மாற்றிக் குருசில் சிறைநின்றான் கொல்கணைவாய் வீழ்தல் கொடிது. (இ - ள்.) பலரினும் முந்தத் தான் குதிரையுடனே களம் புக்கு, முற்பட்ட பூசலில் எதிர்த்துவந்தார் சிதறப் போரை விலக்கிக் கைச் சவளத்தால் தன்மேல் வரும் அம்பை நீக்கி உபகாரி, கரைபோலச் சேனைதாங்கி நின்றான், கொல்லும் கோல்வாயிலே படுமது கொடிதாயிருந்தது எ-று. (10) |