படைக்கோடா விறன்மறவரைக் கடைக்கொண்டு களத்தொழிந்தன்று. (இ - ள்.) பகைவராயுதத்திற்குப் புறங்கொடாத வெற்றியினையுடைய வீரரைக் கூட்டித் தான் பூசற்களரியிலே பட்டது எ-று. (வ - று.) 1உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட நிரைப்பி னெடுந்தகை சென்றான் - புரைப்பின் றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கவரக் களப்பட்டான் றொன்றான் கரந்து. (இ - ள்.) சொல்லின் அஃது அதிசயமோ? பகைவர் கைப்பற்றின நிரையின்பின்னே பெரிய மேம்பாட்டினையுடைவன் சென்றான்; ஒப்பின்றிக் கருதப்பட்ட உடம்பிடமெல்லாம் ஒள்ளிய வாள் கொள்ளை கொள்ளப் போர்க்களரியிலே விழுந்தான், ஒளித்துத் தோற்றுகிலன் எ - று. 'நிரைப்பி னெடுந்தகை சென்றான் என்றது' , இந்நாள்மீண்ட நிரையென்னும் புகழுடனே சென்றானென்றல். (6)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். |