எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து பண்ட பொருண்மொழிந் தன்று. (இ - ள்.) அவிர்ந்து விளங்கும் சடாமகுடத்தினையுடைய முனிவர் விரும்பித் தெளிந்த பொருளைச் சொல்லியது எ-று. (வ - று.) 1ஆய பெருமை யவிர்சடையோ ராய்ந்துணர்ந்த பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித் - தீய இபுளொடு வைகா திடம்படு ஞாலத் தருளொடு வைகி யகல். (இ - ள்.) உண்டாய பெருமையினையும் விளங்கும் வேணியினையும் உடையோராகிய முனிவர் தெரிந்தறிந்த பரந்த வழிமேலே நினைந்து அடங்கித் தீதான மனமயக்கத்துடனே தங்காது அகன்ற பூமியிடத்தில் அருளுடனேதங்கி நீங்கு, நெஞ்சே எ-று. (3)
1. ஏலாதி,67. |