273. முதுகாஞ்சி
தலைவரும் பொருளைத் தக்காங் குணர்த்தி
நிலைநிலை யாமை நெறிப்பட வுரைத்தன்று.

(இ - ள்.) மேலாய் வரும்பொருளைத் தக்கபடி அறிவித்து நிலைநில்லாமையை முறைப்படச் சொல்லியது எ-று.

(வ - று.)
1இளமை நிலைதளர 2மூப்போ டிறைஞ்சி
உளமை யுணரா தொடுங்கி - வளமை
வியப்போவ லில்லா வியலிடத்து வெஃகா
துயப்போக லெண்ணி னுறும்.

(இ - ள்.) இளமைப்பருவம் நிலையினின்று மெலிய முதுமையுடனே தாழ்ந்து உண்மையை யறியாதே யடங்கிச் செல்வத்தினது ஆச்சரியம் ஒழிதலில்லாத அகன்ற பூமியிடத்து ஒன்றும் விரும்பாது பிழைத்துப் போகையை விசாரிப்பின் உறுதியுடைத்து எ-று.

(5)

1. நன்.சூ.451,மயிலை.மேற்.
2. மூப்புவந்தெய்தி