தடவரை மார்பன் றன்னமர் காதல் மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை யுரைத்தன்று. (இ - ள்.) பெரிய மலைபோன்ற மார்பன் தன்னை மேவின அன்பினையுடைய மடப்பத்தினையுடையாளைக் கூடிய மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) ஊதை யுளர வொசிந்து மணங்கமழும் கோதைபோன் முல்லைக் கொடிமருங்குற்- பேதை குவைஇ யிணைந்த குவிமுலை யாகம் கவைஇக் கவலை யிலம். (இ - ள்.) காற்று அசைப்ப வணங்கி மணநாறும் மாலைபோன்ற முல்லைக் கொடியை ஒக்கும் இடையினையுடைய மடவாள் திரண்டு தம்மில் இணையொத்த குவிந்த முலையினையுடைய மார்பைத் தழுவிக் கொண்டு துயரமிலேமாயினேம் எ-று. முல்லைக்கொடிமருங்குற் பேதையாகமெனக் கூட்டுக. (1) |