276. கார்முல்லை
அருந்திறற் கட்டூ ரவர் வாராமுன்
கருங்கடன் முகந்து கார்வந் தன்று.

(இ - ள்.) பெறற்கரிய வலியினையுடைய பாசறையினின்றும் தலைவர் வருவதற்குமுன்னே கரியகடலை முகந்துகொண்டு மேகம் வந்தது எ-று.

(வ - று.)
1புனையும் 2பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர்
துனையுந் துனைபடைத் துன்னார்-முனையுள்
அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
3கடன்முகந்து வந்தன்று கார்.

(இ - ள்.) பூணும் பொற்படையாகிய மேலீட்டையும் எழுந்தசைந்த தலையாட்டத்தையுமுடைய குதிரை பூண்ட திண்ணியதேர் விரையும் கடுகுஞ் சேனையினையுடைய பகைவரது போரிடத்துக் கொலைத்தொழிலை ஏற்றுக்கொண்ட சேனையினையுடைய தலைவர் வருவதற்கு முன்னே கடனீரை முகந்துகொண்டு வந்தது மேகம் எ-று.

(2)

1. முல்லைப்பாட்டின் இறுதிச் செய்யுள்.
2. பொலம்படை : மலைபடு.574;புறநா.116; 19,359:14.
3. பெருங் .3.24:76.