278. நாண்முல்லை
செறுநர் நாணச் சேயிழை யரிவை
வறுமனை வைகித் தற்காத் தன்று.

(இ - ள்.) பகைவர் நாணச் சிவந்த ஆபரணத்தினையுடைய மடந்தை கணவன் பிரிந்த இல்லிலே தங்கித் தன்னைப் பரிகரித்தது எ-று.

(வ - று.)
கொய்தார மார்பிற் கொழுநன் றணந்தபின்
செய்வளை யாட்குப் பிறிதில்லை- வெய்ய
வளிமறையு மின்றி 1வழக்கொழியா வாயில்
நளிமனைக்கு நற்றுணை நாண்.

(இ - ள்.) மட்டஞ்செய்த மாலையாற் சிறந்த மார்பினையுடைய கணவன் பிரிந்தபின்பு இட்ட தொடியினையுடையாட்கு வேறொரு காவலுமில்லை; இடக் கதவுமின்றியே யாவரும் இயங்குதலொழியாத வாயிலையுடைய பெரிய மனைக்கு நல்ல துணைமை நாணே எ-று.

கொய்தாரமார்பென்றவழி, அகரம் சாரியை.

(4)

1. மதுரைக்.356.